ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்த'புதுப்பேட்டை' பட பாணி படுகொலை.. கேமரா.. மைக்.. ஸ்கெட்ச்.. சரிந்த டான் சாம்ராஜ்யம்
உத்தரபிரதேசத்தில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது கொலையை கொலையாளிகள் அரங்கேற்றியது எப்படி...? என்பதை புலனாய்வு செய்கிறது இந்த தொகுப்பு...
கையில் விலங்கு... சுற்றிலும் போலீஸ் என வழக்கமாக நடைபெறும் பரிசோதனைக்காக பிரயாக்ராஜ் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர் கேங்ஸ்டார் ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப்...
தொடர்ந்து டப்.. டப் என துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் பறக்க சுற்றியிருந்தவர்கள் பதறியடித்து ஓடினர்... எல்லாம் 'பாயிண்ட் பிளாங்க்' தொலைவில், அதாவது குறி பார்க்கும் இலக்கு மிக குறுகிய தொலைவிலான அட்டாக்... போலீசார் சூழ்ந்திருக்க எப்படி இவ்வளவு எளிமையாக கொலையாளிகள் அகமதுவை நெருங்கினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு கொலையாளிகள் தரித்த வேடம்தான் செய்தியாளர் வேடம்.. ஆம் செய்தியாளர்கள் போல் வந்து அகமதுவிடம் கேள்வியை கேட்பது போல துப்பாக்கிகளை எடுத்து சுட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
செய்தியாளராக தங்களை காட்டிக்கொள்ள அவர்கள் போலியான அடையாள அட்டையை வைத்திருந்தனர் என தகவல் வெளியாகியிருக்கிறது. கையில் மைக், கேமராவை வைத்துக்கொண்டு ஆதிக் அகமதுவை நாள் முழுவதும் பின்தொடர்ந்து உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே கொலையாளிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் துருக்கியின் ஜிகானா தயாரிப்பு துப்பாக்கிகள் என தெரியவந்துள்ளது. இந்தியாவில் இந்த ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவது சட்டவிரோதமாகும். தடை செய்யப்பட்ட இந்த துப்பாக்கி ஒன்றின் விலை 7 லட்சம் ரூபாய்.
கொலையாளிகள் பிரயாக்ராஜ் ஓட்டலில் தங்கியிருந்து முழுவதும் திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் 22 வயதாகும் லாவ்லீன் திவாரி, 18 வயதாகும் அருண் மையூரா மற்றும் 23 வயதான சன்னி சிங்கிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் லால்வீன் திவாரி 6 மாதங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. சன்னி பெரிய மாபியா கும்பல்களில் வேலை செய்தவர் எனவும் அவர் மீது பல வழக்குகள் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், ஆதிக் அகமது கேங்கை அழிக்கவே தாக்குதல் நடத்தியதாகவும், அப்படி அழித்துவிட்டால் கேங்க்ஸ்டர் உலகில் பிரபலம் ஆகிவிடலாம் என கொலையை அரங்கேற்றியதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு பெரிய டானை கொன்றுவிட்டால் பெரிய ஆளாகிவிடலாம் என்ற ஆசையோடு நடக்கும் குற்றச் சம்பவங்களை எவ்வளவோ சினிமாக்களில் பார்த்திருப்போம். ஆனால், கேமரா - மைக் முன்னிலையில் கேமரா - மைக்கை பயன்படுத்தியே நடந்திருக்கும் இந்த பகீர் சம்பவம் அதிர்ச்சியின் உச்சம்தான்!