தந்தை போட்ட சரவெடி பிளான்..அவரே சிக்கி புஸ்வானமான சம்பவம்..ஆப்பு வைத்த ராஜஸ்தான் ரவுடி கும்பல்

Update: 2023-07-01 14:04 GMT

மகளின் காதலனை தீர்த்துக்கட்ட ரவுடி கும்பலுக்கு தந்தை பணம் கொடுத்த நிலையில், போலீசாரின் வாகன சோதனையில் அந்த கும்பல் துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் சந்திப்பு அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வந்த 3 பேரை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது, 2 துப்பாக்கிகள் மற்றும் 5 தோட்டாக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில் பிடிபட்ட 3 பேரும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த முகேஷ் குஜார், சோனு, கசிப் என தெரியவந்தது.

இவர்களனில், முகேஷ் குஜார் மீது ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இந்த 3 பேருக்கும் பின்னணியில் மற்றொரு 3 பேர் இருப்பதும், இந்த 6 பேரும் சேர்ந்து, கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பதும் விசாரணையில் அம்பலமானது.

அதாவது, சென்னை எம்.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் மணிப்பால் சிங்... இவரது சொந்த ஊர் ராஜஸ்தான்... மணிப்பால் சிங்கின் 19 வயது மகள், ராஜஸ்தானில் இருந்தபோது, அங்கு ராஜேந்தர் என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் பெண்ணின் தந்தை மணிப்பால் சிங்கிற்கு தெரியவர, மகளை அவசர அவசரமாக சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால், காதலியை மறக்க முடியாத காதலன் ராஜேந்தர், சென்னைக்கு வந்து, காதலியின் வீட்டுக்குள்ளேயே நுழைந்து அவரை ராஜஸ்தான் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், ராஜஸ்தானுக்கு சென்று இருவரையும் பிரித்து, மீண்டும் இளம்பெண்ணை சென்னைக்கே அழைத்து வந்துள்ளனர்.

வீடு புகுந்து மகளை தூக்கிச் சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாத மணிப்பால் சிங், மகளின் காதலனை கொலை செய்ய திட்டமிட்டு, தனக்கு நன்கு அறிமுகமான சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த உபேந்தர் சிங் மற்றும் மோகன் சிங் ஆகியோரை நாடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவத்தை கச்சிதமாக முடிக்க, ராஜஸ்தானை சேர்ந்த முகேஷ் குஜார், சோனு, கசிப் ஆகிய 3 பேரை சென்னை வரவழைத்து விவரத்தை கூறியுள்ளனர்.

விவகாரத்தை அறிந்து கொண்ட அந்த கும்பல், முன்பணமாக ஒரு லட்சம் ரூபாயை மணிபால் சிங்கிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அந்தப் பணத்தில் கள்ளச்சந்தையில், 2 துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களை வாங்கியுள்ளது...

பின்னர் ராஜஸ்தான் சென்ற முகேஷ் குஜார், சோனு, கசிப் ஆகிய 3 பேரும், கொலை சம்பவத்தை அரங்கேற்ற இருந்த நிலையில், வேறொரு வழக்கில் முகேஷ் குஜாரை ராஜஸ்த்தான் போலீசார் கைது செய்தனர்.

இதனால் கொலை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் சில நாட்கள் கழித்து சிறையில் இருந்து வந்த முகேஷ் குஜார், ராஜேந்தரை கொன்றுவிட்டதாகக் கூறி, மணிபால் சிங்கிடம் பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து ராஜஸ்தானிலிருந்து வந்த 3 பேரும், சென்னை வந்து மணிப்பால் சிங்கிடம் இருந்து மேலும் 4 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.

பணத்தை கொடுத்த பின்புதான் தெரிந்தது, மகளின் காதலனான ராஜேந்தரை அந்த கும்பல் ஒன்றும் செய்யவில்லை என்பது...

அதிர்ச்சி அடைந்த மணிபால், இதுகுறித்து குஜாரிடம் கேட்க, பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளார்.

இதனிடையேதான், ராஜஸ்தான் செல்வதற்கு தயாரான நிலையில், போலீசாரிடம் சிக்கியதாக 3 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.

வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மணிபால் சிங், அவருக்கு உதவியாக இருந்த உபேந்தர் சிங், மோகன் சிங் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்