பணக்கட்டு வரும் என காத்து கிடந்த இருவரை நோக்கி பாய்ந்த துப்பாக்கி குண்டு - திண்டுக்கல்லில் EX மிலிட்டரி செய்த பகீர் சம்பவம்
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் தனபால். இவர் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
- இதனிடையே, தனது விளைநிலங்களை தனபால் விற்க எண்ணிய நிலையில், அதற்காக சிறுமலையை சேர்ந்த ராஜ்கண்ணு மற்றும் கருப்பையா ஆகியோரை தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
- இதில், தனபாலுக்கு சொந்தமான நிலத்தை இருவரும் வாங்கி மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளனர். அப்போது, நிலத்தை அளந்து பார்த்த இருவரும், ஐந்து ஏக்கர் எனக் கூறப்பட்ட நிலத்தில்... நான்கரை ஏக்கர் மட்டும் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
- இதனால், மீதமுள்ள நிலத்தை தரக்கோரியும் அல்லது நிலத்துக்கான தொகையை திருப்பி தரும்படியும் இருவரும் பலமுறை தனபாலுவிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- இதில், சம்பவத்தன்று தனபாலை சந்திக்க சென்ற ராஜ்கண்ணுவும், கருப்பையாவும் நிலத்துக்கான பணத்தை திருப்பி தர வலியுறுத்தியுள்ளனர்.
- அப்போது, ஏற்பட்ட தகராறில் முன்னாள் ராணுவ வீரரான தனபால், தனது அறையில் இருந்து இரட்டைக்குழல் துப்பாக்கியை எடுத்து வந்து திடீரென இருவரையும் சுட்டதால் அந்த பகுதியே அதிர்ச்சியில் உறைந்தது.
- இந்த சம்பவத்தில் கை, கால் மற்றும் தொடைகளில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
- இது குறித்து தனபாலுவிடன் போலீசார் விசாரணை நடத்த இருந்த நிலையில், அவரும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இதில், தனபாலுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தின் போது ராஜ்கண்ணுவும், கருப்பையாவும் தனபாலை தாக்க முயன்றதாகவும், அதிலிருந்து தன்னை பாதுகாக்கவே துப்பாக்கியை எடுத்ததாகவும் தனபால் கூறியுள்ளார்.
- முதலில் துப்பாக்கியை வானத்தில் சுட்டு மிரட்டல் தான் விடுத்தேன் என தெரிவிக்கும் தனபால், அப்போது தள்ளுமுள்ளு ஏற்படவே, எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததாக தெரிவித்திருக்கிறார்.
- இது ஒரு பக்கம் இருக்க, துப்பாக்கியால் சுடப்பட்ட ராஜ்கண்ணு மற்றும் கருப்பையா தரப்பு, பணத்தை எடுத்து வருவதாக கூறி உள்ளே சென்ற தனபால், துப்பாக்கியை எடுத்து வந்து வேண்டுமென்றே தங்களை சுட்டதாக தெரிவித்துள்ளனர்.
- இதையடுத்து, இருதரப்பினருடமும் புகாரை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முன்னாள் ராணுவ வீரரான தனபால் வைத்திருந்த துப்பாக்கி கடந்த 1997-ல் வாங்கியதும், அதற்கான உரிமம் 2013-ல் பெறப்பட்டதும் தெரியவந்துள்ளதும்.
- இதனிடையே, அந்த உரிமம் தற்போது காலாவதியான நிலையில், புதுப்பிக்காமல் இருப்பதையறிந்ததால் போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.