அத்தியாவசிய உணவில் விஷமா..? விற்பனைக்காக 15,000 லி. பாலில் கலப்படம், அதிர்ச்சியூட்டும் பகீர் தகவல்...
தமிழகத்திலிருந்து தினந்தோறும் கேரளாவிற்கு 2 லட்சம் லிட்டர்களுக்கு அதிகமான பால் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் சூழலில், கடந்த 11-ம் தேதி தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரியானது, கேரளாவில் உள்ள பந்தளம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது.
அப்பொழுது, ஆரியங்காவு பகுதியில் உள்ள சோதனை சாவடி மையத்தில் அந்த டேங்கர் லாரியை மறித்து கேரளா கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது, அந்த பாலானது நீண்ட நேரம் கெடாமல் இருக்கும் வகையில் அதிக அளவு கெமிக்கல் சேர்க்கப்பட்டு விற்பனைக்காக எடுத்துச் செல்வது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, லாரியுடன் சேர்ந்து சுமார் 15 ஆயிரத்து 300 லிட்டர் பாலை பறிமுதல் செய்த கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்தப் பாலை சோதனைக்காக பால் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அந்த பாலில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடிய அமிலங்கள் சேர்க்கப்பட்டது ஆய்வின் முடிவில் உறுதி படுத்தப்பட்ட சூழலில், தென்காசி மாவட்டம் வி.கே புதூர் பகுதியில் இருந்து பாலை ஏற்றுமதி செய்த உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், அமிலம் கலக்கப்பட்ட பாலை தற்போது மண்ணில் ஊற்றி அழிக்கவும், பாலின் உரிமையாளர் நஷ்ட ஈடு கோரி வேறொரு வழக்கு தொடர்ந்து வழக்கை நடத்தலாம் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன் அடிப்படையில், தற்போது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் பாலை, ஆரியங்கா பகுதியில் உள்ள கழுதை உருட்டி என்ற பகுதியில் கொட்டி அழிக்க கால்நடை துறை அதிகாரிகள் முயற்சி செய்தபோது அதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த பகுதியில் அந்த பாலை கொட்டி அழிக்காமல், நேற்று அமிலம் கலந்த பாலை லாரியுடன் திருவனந்தபுரம் பகுதிக்கு கால்நடை துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இந்நிலையில், தற்போது திருவனந்தபுரம் பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் உள்ள கழிவு நீர் கிடங்கில் அமிலம் கலந்த பால் முழுவதும் (அதாவது 15,300 லிட்டர்) கொட்டி அழிக்கப்பட்டது.