கேரளாவில் ஜூலை மாதத்திலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில், ஜூன் மாதத்தில் மட்டும் டெங்கு அறிகுறியுடன் 27 பேர் உயிரிழந்த நிலையில், 6,006 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் 1806 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஏதேனும் வகை டெங்கு காய்ச்சல் வந்தால், கடும் பாதிப்பு ஏற்படும் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொசுவை மூலத்திலேயே அழித்து டெங்கு பரவுவதை தடுக்கும் சுகாதாரப் பணிகள் இம்மாதம் முழுவதும் தொடரும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இறப்பு விகிதத்தை குறைக்க முயன்று வருவதாகவும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.