ஸ்ரீமதி கடிதம் குறித்து சர்ச்சை கட்டுரை..சாவித்திரி கண்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்கு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி எழுதிய கடிதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கட்டுரை எழுதியதாக சாவித்திரி கண்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வரும் சாவித்திரி கண்ணன், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி விவகாரம் தொடர்பாக தனது இணையதளத்திலும், முகநூல் பக்கத்திலும் தவறான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மாத இதழ் ஒன்றில், மாணவி எழுதிய கடிதம் குறித்து சர்ச்சைக்குள்ளாக கட்டுரை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பான விசாரணைக்காக சாவித்திரி கண்ணனை, அவரது இல்லத்தில் இருந்து, கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார், திண்டிவனம் அழைத்து சென்றனர்.
ஒலக்கூர் காவல்நிலையத்தில் வைத்து, விசாரணை நடத்திய பின், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணை முடிந்ததும், மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.