மயானத்தில் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு..! - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், சுடுகாட்டில் எரிவாயு தகன மேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட மேட்டு காலனி பகுதியில் உள்ள சுடுகாட்டில், எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சமூகத்தினர், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி. சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல தலைமுறைகளாக தாங்கள் மட்டும் சுடுகாட்டை பயன்படுத்தி வரும் நிலையில், எரிவாயு தகன மேடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என, வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் ஊர்வலமாக சுடுகாட்டுக்கு சென்று, எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.