வளர்ந்தும் குழந்தைகளாக பிள்ளைகள்.. ஓய்வு காலத்தில் ஓட வைக்கும் வாழ்க்கை - "சாகுறத தவிர வேற வழி இல்ல".. கதறும் தந்தை
2 மாற்றுத் திறனாளி பிள்ளைகளைப் பராமரிக்க முடியாத நிலையில், அரசின் இலவச வீடு கேட்டு அவர்களை லோடு ஆட்டோவில் ஏற்றி வந்து ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த கூலித் தொழிலாளியின் கதை கேட்போரைக் கலங்க வைக்கிறது...
குடும்ப பாரத்தை பிள்ளைகளிடம் இறக்கி வைத்து விட்டு நிம்மதியாய் ஓய்வெடுக்க வேண்டிய வயது இது... ஆனால் இந்த வயோதிக பெற்றோரோ, வளர்ந்தும் குழந்தைகளாகவே இருக்கும் தங்கள் 2 மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் குடும்ப பாரத்தோடு சேர்த்து தூக்கி சுமந்து வருகின்றனர்...
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரைச் சேர்ந்தவர்கள் தான் இந்த கூலித் தொழிலாளிகளான சண்முகவேலும், முத்து மாடத்தியும்...
இவர்களின் மூத்த மகன் ராஜ்குமார்... வயது 23... இளைய மகள் விஜயலட்சுமி... வயது 20... இருவருமே பிறவியில் இருந்தே மாற்றுத்திறனாளிகள்... எழுந்து நிற்கவோ... படுக்கவோ... ஏன் தாங்களாகவே இயற்கை உபாதை கழிக்கவோ கூட முடியாத நிலைமை...
ஏற்கனவே வறுமை ஒருபுறம்வாட்ட... மறுபுறம் மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை கழுத்தை நெறிக்க... வீட்டு வாடகை எனும் சுமை மேலும் ஏறி அழுத்தி மூச்சு கூட விட முடியாமல் தவித்து வருகின்றனர், சண்முகவேல் - முத்து மாடத்தி தம்பதி...
தங்கள் இயலாமையைக் கருத்தில் கொண்டு தங்களுக்காக இல்லையென்றாலும் தங்கள் பிள்ளைகளுக்காக வாவது அரசு இலவச வீடு வழங்க வேண்டும் என இத்தம்பதி ஏறாத படியில்லை... வழங்காத மனுவில்லை... ஆனால் இதுவரை இலவச வீட்டிற்கான ஒரு செங்கல் கூட ஊன்றப்படவில்லை...
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சண்முகவேலும், முத்து மாடத்தியும் தள்ளாத வயதிலும் தங்கள் மாற்றுத் திறனாளி பிள்ளைகளை கஷ்டப்பட்டு லோடு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்து, இலவச வீடு வழங்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்...
வீட்டு வாடகை கொடுக்கும் பணத்தை சேமித்தால் தான் தனது பிள்ளைகளுக்கு உணவு கூட கொடுக்க முடியும் என்று வேதனை தெரிவிக்கும் சண்முகவேல், தீர்வு கிடைக்காவிட்டால் குடும்பத்தோடு சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது மட்டும் தான் தீர்வு என்று கண்கலங்கியது, கல் நெஞ்சையும் கரைய வைத்துவிடும்...
"என்னுடைய பிள்ளைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறேன்"
"வீட்டிற்கு வாடகை கூட கொடுக்க முடியவில்லை"
"இலவச வீடு அரசு கட்டிக் கொடுக்க வேண்டும்"
இவர்களுக்குப் பின் இந்த மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கென யாருமில்லை... இருக்கும் வரை பராமரிக்க பெற்றோரிடமும் தெம்பில்லை... அரசு பார்த்து உதவி செய்து இயலாத பெற்றோரின் கவலையைப் போக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...