இரும்பு கம்பி திருட வந்து சிக்கிய இருவர் - கட்டுமான ஊழியர்கள் தாக்கியதால் நடந்த சோகம்
சென்னை சைதாப்பேட்டை அருகே, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், இரும்பு கம்பிகளை திருட வந்த நபர்களை ஊழியர்கள் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை சைதாப்பேட்டை தாடந்தர் நகர் மைதானம் அருகே, புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுப்பணித்துறை கட்டடத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் இரும்பு பொருட்களை திருடியுள்ளனர். அப்போது அதனைப் பார்த்த கட்டுமான ஊழியர்கள், அவர்களை விரட்டிப் பிடித்ததில், 2 பேர் சிக்கினர். பின்னர் இருவரையும் கட்டி வைத்து, ஊழியர்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான விசாரணையில், உயிரிழந்த நபர், சைதாப்பேட்டை வெங்கடாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சாகின்ஷா காதர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கட்டுமான ஊழியர்கள் 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.