மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்.. பைக்கோடு தூக்கி வீசப்பட்ட நபர் -18 வயது இளைஞர் செய்த பயங்கரம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே, அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர். காவல்துறையினர் பாதுகாப்புப் பணயில் ஈடுபடாததே விபத்திற்கான காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு நொடியில் குடும்பத்தின் நிலைமையே தலைகீழாக மாற்றியுள்ளது இந்த விபத்து...
சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே, பரபரப்பாக காணப்படும் கீழ்ப்பாக்கம் ஈவெரா பெரியார் சாலை...
இந்த சாலையின் சிக்னலில், கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலையை சேர்ந்த 45 வயது திருமுருகன் என்பவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.
சிக்னல் கிரீனில் விழவே, திருமுருகன் இருசக்கர வாகனத்தை இயக்க முயன்றபோது, திடீரென மின்னல் வேகத்தில், எதிரே வந்த கார் ஒன்று அவரது வாகனம் மீது மோதியது.
இதில், திருமுருகனின் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார் பச்சையப்பன் கல்லூரி சுற்றுச்சுவற்றில் மோதியது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த திருமுருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்த நிலையில், அவரிடம் விசாரணை நடத்தியபோது, சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீ ஷிவ் விக்ரம் என தெரியவந்தது. 18 வயதே நிரம்பிய இந்த இளைஞர், வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே, காரை ஓட்டி வந்ததும் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விபத்தில் உயிரிழந்த திருமுருகனுக்கு, 10 வயதில் மகன் உள்ள நிலையில், சிறுவனின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தால், இந்த விபத்தை தடுத்திருக்கலாம் எனக் கூறும் உறவினர்கள், திருமுருகனின் இறப்பை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.