சேப்பாக்கம் மைதான வாயிலில் வசமாக சிக்கிய 'புல்லட்' திருடர்கள் - விசாரணையில் வெளிவந்த பல பல தகவல்கள்
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு வரக்கூடிய ரசிகர்களின் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை தொடர்ச்சியாக திருடிய கும்பல் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் சென்னையில் தற்போது அரங்கேறி உள்ளது.
கடந்த 12ந் தேதி , சென்னை மாதவரத்தை சேர்ந்த அஸ்வின் என்பவர், சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்தபோது, தனது புல்லட் காணாமல் போய்விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த ரசிகர் ஒருவர், மைதானத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த புல்லட்டின் சைடு லாக்கை உடைத்து திருட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லையை சேர்ந்த சுரேஷ் ராஜன் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மணி என தெரியவந்தது. விசாரணையில், திருடிய இருசக்கர வாகனங்களை பார்க்கிங்கில் மறைத்து வைத்து அதிகப்படியான வாகனங்களை திருடியவுடன் மொத்த வாகனத்தையும் சொந்த ஊருக்கு கொண்டு சென்று விற்பதும் தெரிய வந்தது. இதேபோன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 10 புல்லட்டுகளையும் பார்க்கிங்கில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்