பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு ஜப்தி நோட்டீஸ் - காஞ்சிபுரம் மாநகராட்சி அதிரடி
ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கியை செலுத்தாத பி.எஸ்.என்.எல். நிறுவன அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டினர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் தெரு, வணிகர் வீதி பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, உள்ளிட்ட எதையும் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பலமுறை நோட்டீஸ் அளித்தும் வரிபாக்கியை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதன் எதிரொலியாக, தற்போது மாநகராட்சி நிர்வாகம் ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிஎஸ்என்எல் அலுவலக அதிகாரிகள் நோட்டிஸை வாங்க மறுத்ததால், மாநகராட்சி அதிகாரிகள் அலுவலக வாசலில் ஜப்தி நோட்டீஸை ஓட்டிவிட்டு சென்றனர்.