பார்டர்-கவாஸ்கர் கோப்பை: INDvsAUS அடுத்தடுத்து இந்தியாவிடம் அடி - மீளுமா ஆஸி.? நாளை நிகழப்போவது என்ன?

Update: 2023-02-08 02:21 GMT

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர்தான் அதிக கவனம் பெறும் தொடர் எனக் கூறப்பட்டாலும், சமீப காலமாக இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரும் ஆஷஸுக்கு நிகராக கவனம் பெற்று வருகிறது.

டி20 போட்டிகள் கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போன்ற தொடர்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பில் வைத்திருக்கின்றன.

இத்தகைய சூழலில், 2023ம் ஆண்டுக்கான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி நாக்பூரில் 9ம் தேதி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்துடன் ஆஸ்திரேலியாவும், வங்கதேசத்தைப் பதம் பார்த்த முனைப்புடன் இந்தியாவும் இந்த தொடரில் களம் காண்கின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு கோலியும், புஜாராவும்தான் அஸ்திவாரம்.. காயத்தில் இருந்து குணமடைந்த ஜடேஜா, அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலம்.. அஸ்வின்-ஜடேஜா சுழல் கூட்டணி, ஆஸி.க்கு குடைச்சல் தரக்கூடும்.. வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் சிறப்பான பார்மில் இருப்பது இந்தியாவிற்கு சாதகம்...

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தும் லபுசேனும் நம்பிக்கை நட்சத்திரங்கள்...

நடுவரிசையில் டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம் உள்ளிட்ட சிறந்த வீரர்களைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவிற்கு, முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டார்க்கும் ஹேசல்வுட்டும் காயம் அடைந்து இருப்பது பின்னடைவு...

சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனை ஆஸ்திரேலியா அதிகளவும் நம்பியிருக்கிறது. அதே சமயம், புதிதாக களமிறக்கப்படவுள்ள சுழற்பந்துவீச்சாளர் டாட் முர்பி (Todd Murphy) இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும் ஆச்சர்யம் இல்லை...

கடந்த 2004ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றதில்லை. சொல்லப் போனால் இதற்குப் பிறகு இந்தியாவில் நடந்த 14 டெஸ்ட்களில் ஒற்றை வெற்றியை மட்டுமே ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் தொடரை வெல்வது ஆஷஸ் தொடரை வெல்வதைக் காட்டிலும் பெரியது என ஸ்டீவ் ஸ்மித் சொல்லியதற்கு இதுதான் காரணம்...

மட்டுமின்றி 2014-15ம் ஆண்டுக்குப் பிறகு பார்டர்-கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லவில்லை. கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து இந்தியா ஆட்டம் காண வைத்தது. இம்முறை இந்தியாவிலேயே போட்டி நடப்பது இந்திய அணிக்குதான் கூடுதல் சாதகம்...

19 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலியாவும், 10வது முறையாக கோப்பையை வெல்ல இந்தியாவும் களமாடக் காத்திருப்பதால் அடுத்த ஒரு மாதத்திற்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்துதான்...

Tags:    

மேலும் செய்திகள்