சென்னை வானகரத்தில் உள்ள உணவகத்தில், பிரியாணியில் பூரான் கிடந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விளக்கம் கேட்டு உணவு பாதுபாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அந்த உணவகத்தில் கடந்த 22-ஆம் தேதி, வாடிக்கையாளர்கள் உணவு அருந்தியபோது பிரியாணியில் பூரான் கிடந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சமையலறை தூய்மை இல்லாமலும், தயாரிக்கப்பட்ட அனைத்து உணவுகளும் திறந்த நிலையில், அதில் பூச்சிகள் மற்றும் ஈக்கள் மொய்த்தபடி இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், உணவைக் கையாள்பவர்கள், தலைக்கவசம், கையுறை ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இதுதொடர்பான 7 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு ஹோட்டல் நிர்வாகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.