வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசளிக்கும் திட்டத்தில் போட்டியிட முன்பதிவு செய்யலாம் என வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்பு ஆகிய 3 இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை பாராட்டி பரிசளிக்கும் திட்டம் 2021-2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான போட்டிக்கு விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். குத்தகை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியின் நுழைவுக் கட்டணமாக 100 ரூபாயை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு பரிசு பெறாத விவசாயிகளும் பங்கேற்கலாம் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.