நீரிழிவு நோய் வகை-1 உள்ள மாணவர்கள், வகுப்பு மற்றும் தேர்வின்போது மாத்திரை, பழங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர அனுமதிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், வகை-1 நீரழிவினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பள்ளி மற்றும் தேர்வு நேரங்களில், மருந்து, மாத்திரைகள், பழங்கள், சிற்றுண்டிகள், குடிநீர், உலர் பழங்களை எடுத்து வர அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. குளுக்கோ மீட்டர் போன்ற ரத்த, சர்க்கரை அளவை சோதித்தறியும் உபகரணங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும், தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பு மற்றும் இன்சுலின் பம்பு போன்றவற்றை தங்களது உடலில் பொருத்தி பயன்படுத்தி வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. திறன் அலைபேசியைப் பயன்படுத்தி அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டால், தேர்வு நேரங்களில் தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து, குளுக்கோஸ் அளவினைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.