ராணுவம், துணை ராணுவம், CBI என அனைவரையும் அலறவிடும் 'ஒரு மாநிலம்'.தலையை பிய்த்து கொள்ளும் மத்தியஅரசு

Update: 2023-06-26 06:33 GMT

மணிப்பூர் மாநிலத்தில் கிளர்ச்சியாளர்களை கைது செய்ய சென்ற ராணுவத்தினரை, கிராம மக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டதால், அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் ராணுவ வீரர்கள் வெளியேறியுள்ளனர். வன்முறை வெடித்த மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மைதேயி சமூகத்தினர் தங்களுக்கும் பழங்குடியினர் அந்தஸ்த்து வேண்டும் எனக்கூறி மாநில அரசிடம் அடம்பிடித்தனர். அதன் விளைவாக எழுச்சியடைந்த குகி மற்றும் நாகா பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3ம் தேதி ஒற்றுமை பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு, ஒற்றுமை பேரணி கலவர களமானது. வீடுகள், கடைகள் என எல்லாவற்றையும் தீ வைத்து கொளுத்தினார்கள் அன்று தொடங்கிய பிரச்சனை, அணையாத நெருப்பாக இருக்கின்றது....

கலவரங்கள் விட்டு விட்டு வெடித்துக் கொண்டிருந்த நிலையில் தான், ராணுவ மற்றும் துணை ராணுவ படைகள் அம்மாநிலத்தில் குவிக்கப்பட்டனர். ஆனாலும் இருதரப்பினரிடையேயான பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை. அவ்வபோது தீ வைப்பது, கலவரம் செய்வது என இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் மணிப்பூரின், இம்பால், கிழக்கு காங்போக்பி ஆகிய இடங்களில், அடையாளம் தெரியாதவர்களுக்கும், ராணுவத்திற்கும் சண்டை நடந்து வருகிறது. 3 நாட்களாக நடந்து வரும் வன்முறையில், ராணுவத்தினர் மீது இயந்திர துப்பாக்கிகள் பிரயோகிக்கப்பட்டது. அதிர்ச்சியான ராணுவத்தினர், நவீன ஆயுதங்கள், கிளர்ச்சியாளர்களுக்கு எப்படி கிடைத்தது என யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அதே வேளையில் தாக்குதல் நடத்தும் கிளர்ச்சி குழுவினருக்கும், கிராமத்தினர் ஆதரவு கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

யயின்காங்கோக்பி என்ற கிராமத்தில் ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கும், பாதுகாப்பு படைக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் ஆயுத குழுவை நோக்கி கூடுதல் ராணுவப்படை நகர்ந்தது. ஆங்காங்கே பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்டவற்றை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.

அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்ய முயற்சித்த போது, அந்த கிராமத்தின் பெண்கள் உட்பட ஏராளமானோர், கூடுதல் பாதுகாப்பு படையினரை சூழ்ந்து கொண்டு நகர விடாமல் செய்தனர். இதனால் கைப்பற்றிய ஆயுதங்களுடன் ராணுவத்தினர் முகாமிற்கு திரும்பினர்.

அதே போல, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் விசாரணைக்காக சென்ற சிபிஐ மற்றும் தடயவியல் குழுவினரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் துணை ராணுவப்படை திணறி வருகிறது.

பல நாட்களாக மணிப்பூர் கலவர பூமியாக கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில், இதனை தணித்து முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவதிக்குள்ளாகிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்