மங்களாதேவி கண்ணகி கோவில்....புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் கோரிக்கை
தேனி மாவட்டத்தில் உள்ள மங்களாதேவி கண்ணகி ஆலயத்தை பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய அதிமுக எம்.பி ரவீந்திரநாத், தேனி மாவட்டம் பழையங்குடியில் உள்ள மங்களாதேவி கண்ணகி கோவில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றார்.தற்போது கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில், சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டும் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
புராதனமான இந்த ஆலயத்தை மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என கூறிய அவர், இதனை புராதன நினைவுச் சின்னமாக அறிவித்து வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தை பாதுகாக்க போதிய நிதிகளை ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.