பெருமாளுக்காக ஆதிஷேசன் உருவாக்கிய நகரம்...கல்வி தெய்வமாக ஹயக்ரீவன் வழிபாட்டிற்கு உகந்த ஸ்தலம்
நிம்மதியற்ற வாழ்வில சிக்கி தவிப்போருக்கு சர்வரோக நிவாரணம் அளிக்கும் ஸ்தலமாக விளங்கும் திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயிலின் சிறப்புகளை தற்போது பார்க்கலாம்.
ஸ்ரீமன் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிஷேசன் உருவாக்கிய நகரமான திருவந்திபுரத்தில் அமைந்துள்ள இந்த ஸ்தலத்தில் தேவர்களுக்கு தலைவனான பெருமாள் தேவநாத பெருமாளாக காட்சி கொடுக்கிறார்.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 42 வது ஸ்தலம்
இங்குள்ள மலையில் தான் பிரம்மா தவம் புரிந்தாராம்...
அனுமன் சஞ்சீவி பர்வதத்தை எடுத்து சென்ற போது... அதில் இருந்து சில துண்டுகள் இந்த மலையில் விழுந்ததால் இந்த மலை ஔஷாதாசலம் என்று அழைக்கப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக கல்வி கடவுள் என்றதும் நம்முள் பலருக்கும் சரஸ்வதி தேவியே முதலில் நினைவுக்கு வரும்...
ஆனால் குதிரை முகத்துடன் காட்சியளிக்கும் ஹயக்ரீவனும் கல்வி தெய்வமே...
இவருக்கு உலகிலேயே இந்த ஊரில் தான் முதன் முதலில் கோயில் எழுப்பப்பட்டதாம்.
பொதுவாக பெருமாள் கோயில்களில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில், நரசிம்மர் லட்சுமியை இடதுமடியில் அமரவைத்திருப்பார். ஆனால் இந்த ஸ்தலத்தில் நரசிம்மரின் வலது தொடையில் லட்சுமி காட்சி கொடுப்பது... தனி சிறப்பு.
கோயில் அருகே அமைந்துள்ள கருடநதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளித்த புண்ணியம் கிடைக்குமாம்.
ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுவதாக சொல்கிறார்கள், இங்குள்ள மக்கள்.
தேவநாத பெருமாளை வணங்குவோர் உயர் பதவி... நிலைத்த செல்வம்... மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு... நீண்ட ஆயுள்... ஆகியவற்றை பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
பெருமாளுக்கு தாகம் தீர்க்க ஆதிஷேசன் உருவாக்கிய கிணறு... இன்றும் கோயிலில் இருப்பதாக கூறும் பக்தர்கள்.. இந்த கிணற்றில் உப்பு வெல்லம், மிளகு, பால் ஆகியவற்றை போட்டு செல்கின்றனர்.
இப்படி செய்தால் நோய்கள் அனைத்தும் குணமாகும்... கட்டி, பால் உண்ணி ஆகியவை நீங்கும் என நம்புகிறார்கள். சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
குரு, ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வழிப்பட வேண்டிய ஸ்தலமாகவும்...இது திகழ்கிறது.
துளசி மாலை சாத்தியும்... நெய்தீபம் ஏற்றியும்... முடிக்காணிக்கை செலுத்தியும்... மாவிளக்கு போட்டும்... தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள், பக்தர்கள்.
இந்த கோயிலின் நடை காலை 5 மணி முதல் நண்பகல் 11 மணி வரையும்... பிறகு மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் வழியில் திருவந்திபுரம் உள்ள நிலையில், கடலூரில் இருந்து திருவந்திபுரம் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நாமும் தேவநாத சுவாமி பெருமாளை சரணடைந்து... நம்மை அண்டிய பிணிகள் அகலும் பாக்கியம் பெறுவோம்.