நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கலவரம் -60 பேர் உயிரிழப்பு.. முதலமைச்சர் பிரேன் சிங் வெளியிட்ட அறிவிப்பு
மணிப்பூர் கலவரத்தில் 60 பேர் பலியானதாகவும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.
மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே மோதல் வெடித்து மிகப்பெரிய வன்முறையாக மாறியது. இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என தெரிவத்துள்ள முதலமைச்சர் பிரேன் சிங், மாநிலத்தில் அமைதியை காக்குமாறு பொதுமக்களுக்கு கேட்டுக் கொண்டார்.
வன்முறையில் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 1,700 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் கூறினார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தோருக்கு 2 லட்சம் ரூபாயும், சிறிய காயமடைந்தோருக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், சேதமடைந்த வீடுகளுக்கு, அதிகாரிகளின் மதிப்பீட்டுக்குப் பிறகு 2 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வன்முறையைத் தூண்டியவர்கள், தங்கள் பொறுப்புகளைச் செய்யாத அரசு ஊழியர்கள் மீது, உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்ற முதலமைச்சர், ஆதாரமற்ற விஷயங்கள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.