மதமாற்றத்தைத் தடுக்க அனைத்து இந்துக்களும் பாடுபட வேண்டுமென, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில், வருண பகவான் வழிபாடு நூல் வெளியீட்டு நடைபெற்றது. இதில் பேசிய மோகன் பகவத், இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாயத்தில் இருக்கக்கூடாது என குறிப்பிட்டார். ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று கோயில்களை நிர்மாணம் செய்ததன் மூலம், அங்கெல்லாம் நமது கருத்துகள் பரவியுள்ளதாக மோகன் பகவத் தெரிவித்தார்.
கோவில் சொத்தில் இருந்து ஊதியம் வாங்கும் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு, கோவிலை புனரமைத்து காப்பாற்றும் கடமை உள்ளது என்று, பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அழிசூர் அருளாலேஸ்வரர் கோவிலை பார்வையிட்ட பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், நன்கொடையாளர்களாகிய ஊர் பொதுமக்கள், பழமையான கோவிலை, அறநிலை துறை அதிகாரிகள் மேற்பார்வையில், தொன்மை மறாமல் புதுப்பித்து கொள்ளலாம் என்று, சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு சமர்ப்பித்த அறிக்கை புத்தகத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்தப்படுவதாக அமைச்சர் பொன்முடி பெருமிதம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் சென்னை புதுக்கல்லூரியில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற அணிக்கு விருது வழங்கிய பின் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் கல்வி, விளையாட்டு, சுகாதாரம் ஆகியவை முதல்வரின் முக்கியமான கோட்பாடாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில், பாமக நகர செயலாளர் வெட்டி படுகொடுலை செய்யப்பட்டது தொடர்பாக, ஒருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மணிகூண்டு அருகே, பூ வியாபாரம் செய்து வந்த செங்கல்பட்டு பாமக நகர செயலாளர் நாகராஜை, இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட நாகராஜின் உறவினர்கள், செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இந்த நிலையில், கொலையில் சம்பந்தப்பட்ட அஜய் என்பவரை தப்பியோடும் போது போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.