மரம் வெட்டும் இயந்திரத்தில் காதலியை கர கரவென அறுத்த 56 வயது காதலன்.. குக்கரில் வேக வைத்தது கொடூரத்தின் உச்சம்

Update: 2023-06-09 07:22 GMT

மும்பையில், லிவ்-இன் உறவில் இருந்த காதலியை, காதலன் கொலை செய்ததுடன், உடல் பாகங்களை 20 துண்டுகளாக வெட்டி, குக்கரில் வேக வைத்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

மும்பை தானேவின் அருகே உள்ள பாயந்தார் என்னும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டிலிருந்து, துர்நாற்றம் வீசியுள்ளது.

துர்நாற்றத்தை தாங்க முடியாமல், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்து வீட்டினர், போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், அந்த வீட்டை சோதனை செய்தபோது அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

பெண் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி, ஆங்காங்கே வீசப்பட்டு இருந்தது. மேலும், துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்களில் சில, குக்கரில் வேக வைத்திருப்பதையும் கண்டு போலீசார் திகைத்துப் போயினர்...

அதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் வசித்து வந்த 56 வயதான மனோஜ் சானே என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர்.

இதன் முதற்கட்ட விசாரணயில், கொலை சம்பவம் நடந்து 3 அல்லது 4 நாட்கள் இருக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட பெண் 36 வயதான சரஸ்வதி வைத்யா என்பதும், 56 வயதான மனோஜ் சானே என்பவருடன், அவர் லிவ்-இன் உறவில் இருந்து வந்ததும் தெரியவந்து. ஆனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடக்கவே, ஆத்திரமடைந்த மனோஜ் சானே, சரஸ்வதி வைத்யாவை கொடூரமாக தாக்கிக் கொலை செய்துள்ளார்.

கொலையை மறைக்க திட்டம் தீட்டிய மனோஜ் சானே, சரஸ்வதியின் உடல் பாகங்களை, மரம் வெட்டும் இயந்திரத்தால், 20 துண்டுகளாக வெட்டியுள்ளார். பின்னர், துண்டாக்கப்பட்ட உடல் பாகங்களை, குக்கரில் வேக வைத்துள்ளார். வேக வைக்கப்பட்ட உடல் பாகங்களை, பிளாஸ்டிக் பைகளால் கட்டி, மனோஜ் சானே வனப்பகுதியில் வீச இருந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட மனோஜ் சானேவை, வரும் 16ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாகவே, லிவ்-இன் உறவில் காதலியை மனோஜ் சானே இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது, போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பிறகே உண்மை என்னவென்று தெரியவரும்...

கடந்த ஆண்டு டெல்லியில் இதேபோன்று, லிவ் இன் உறவில் இருந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண்ணை, அவரது காதலன் அப்தாப் பூனவாலா கொடூரமாக கொலை செய்து, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம், நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்