32 நிமிடத்தில் 52 செய்திகள்.. காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (26.06.2023)

Update: 2023-06-26 04:06 GMT

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று காலை வெளியாகிறது. பி.இ., பி-டெக் படிப்பில் சேர்வதற்கான கலந்தாவுக்கு, ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 301 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 5ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்ட நிலையில், தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி பட்டியலை வெளியிட உள்ளார்.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு, சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் முழு உருவ கம்பீரச் சிலை அமைக்க, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள் தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் என புகழாரம் சூட்டியுள்ளார்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை தமிழக அரசு குறைத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில், மத்திய அரசு தமிழக அரசுக்கு 3 ஆயிரத்து 767 கோடியே 55 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக வழங்கப்படும் நிதியைப் பெருமளவில் குறைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள், அனைவருக்கும் கல்வி உரிமைத் திட்டம் என்ற நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

வருமானம் வராத டாஸ்மாக் கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும், மூடிய கடைகளுக்கு அருகில் புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒரே நாளில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்த அவர், மதுவிலக்கை அமல்படுத்துவது தான் அதிமுகவின் கொள்கை என்று கூறினார்..

Tags:    

மேலும் செய்திகள்