புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹான்ஸ் வகை புகையிலையில் ஒன்று புள்ளி 8 சதவீதம் நிகோடின் கலந்திருப்பதால் அதை அனுமதிக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளதால், புகையிலை பொருட்கள் மீது தடை விதிப்பது நியாயமானதுதான் என கருத்து தெரிவித்தார்.
மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி வழக்கில் ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பேரவையில் உத்தவ் பெரும்பான்மையை இழந்துவிட்டார் என ஆளுநர் முடிவு எடுத்தது தவறு என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசியல் கட்சி பிரச்சினையில் தலையிட ஆளுநருக்கு அரசியலைமைப்பு அதிகாரம் வழங்கவில்லை என கருத்து தெரிவித்தனர். "உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துவிட்டதால், மீண்டும் அவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்த முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
முந்தைய பாஜக அரசு மீதான ஊழல் புகாரில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியை சேர்ந்த சச்சின் பைலட் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அஜ்மீர் முதல் ஜெய்பூர் வரை பயணம் மேற்கொள்ளும் நிலையில், ஏராளமான தொண்டர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு அவருடன் பயணித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு மட்டும் 25 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 13 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். போதைப்பொருட்கள் மீது போர் தொடுக்கும் நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கை தொடரும் என உறுதி அளித்தார்..
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையின் செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். ஜிப்மர் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அந்தர் பல்டி அடித்துள்ளதாகவும், துணைநிலை ஆளுநர் உண்மைக்கு புறம்பாக பேசக்கூடாது என்றும் குறிப்பிட்டார். தமிழிசை சவுந்தரராஜன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும் என்றும் நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.