செங்கல்பட்டு மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 210 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மதுராந்தகம் அருகே சித்தாமூரில், கடந்த மாதம் விஷச்சாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு எஸ்.பி.யாக புதிதாக பொறுப்பேற்றுள்ள வி.வி. சாய் பிரணீத் தலைமையில் காவல்துறையினர், ஓதியூர், நயினார்குப்பம், முதலியார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 எரிசாராய கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.