சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது கருப்பின சிறுவன்..பற்றி எரியும் பாரிஸ்..என்ன நடக்கிறது..?

Update: 2023-06-30 02:21 GMT

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 17 வயது கருப்பின சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸில் நடப்பது என்ன என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

எழில் பொங்கும் அழகிய நகரமாக அறியப்படும் பாரிஸ்... தற்போது களவரக்காடாக் காட்சியளித்து வருகிறது.... சாலைகள் எங்கும் எரிந்துகொண்டிருக்கும் வாகனங்கள்... அடித்து நொருக்கப்படும் வணிக நிறுவனங்கள் என அமைதியற்று கிடக்கிறது பாரீஸ் தெருக்கள்...

இந்த வன்முறைக்கு காரணம் 17 வயது கருப்பின சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொள்ளப்பட்டது தான். கடந்த 27ம் தேதி போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, 17 வயதேயான ஆப்பிரிக்க வம்சாவளி யை சேர்ந்த நஹேல் என்ற சிறுவன் காரில் சென்றுள்ளான்.

போலீசார் காரை நிறுத்தக்கூறியும் சிறுவன் நஹேல் நிறுத்தாமல் சென்றதால், ஆத்திரமடைந்த போலீசார் விரட்டி சென்று சிறுவனின் காரை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

விசாரணையில், சிறுவன் தங்களை நோக்கி மோதுவதுபோல் வந்ததால்தான் சுட்டோம் என போலீசார் குற்றஞ்சாட்டிய நிலையில், போலீசார் சிறுவனை துப்பாக்கியால் சுட்ட பதபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இன வேறுபாடின்றி இணக்கமாக வாழும் பாரிஸ் மக்களிடையே இச்சம்பவம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிராக குரல் எழுப்பிய மக்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

லில்லி, டோலூஸ், அமியன்ஸ், டிஜோன், எஸ்ஸோன் ஆகிய நகரங்களில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட மக்கள், குப்பை தொட்டிகள், வாகனங்களுக்கு தீ வைத்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

இரண்டு நாட்களாக தொடரும் வன்முறையில் சுமார் 150 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .

சிறுவனை சுட்டுக்கொன்ற போக்குவரத்து போலீசாரை கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாகவும், நீதி கேட்டு போராடும் மக்கள் வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்