முன்னாள் ராணுவ வீரரின் கொடூர செயல்-சரமாரியாக பாய்ந்த தோட்டாக்கள்-தொடரும் துப்பாக்கி தாக்குதல்

Update: 2023-10-27 06:13 GMT

அமெரிக்காவில் உள்ள ஸ்வின்ஸ்டன் நகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு என்ன நடந்தது? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தனது அணு ஆயுத பலத்தால் உலக நாடுகளில் நடக்கும் சண்டைகளுக்கெல்லாம் சட்டாம்பிள்ளை வேலை பார்க்கும் அமெரிக்கா...சொந்த நாட்டு மக்கள் துப்பாக்கி சூட்டிற்கு இறையாவதை தடுக்க முடியாமல் தவிக்கிறது.

அமெரிக்காவில் அனுதினமும் துப்பாக்கிகளில் இருந்து வெளிவரும் தோட்டாக்களின் சத்தம் ஓய்ந்தபாடில்லை... எதற்காக சுடப்பட்டோம் என்பது கூட தெரியாமல் பலியாகும் அப்பாவி உயிர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், அமெரிக்காவின் மெய்னி மாகாணத்தில் உள்ள ஸ்வின்ஸ்டன் நகரில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு... காரில் வந்து இறங்கிய மர்ம நபர் ஒருவன்... அங்குள்ள பார் மற்றும் வணிக வளாகத்திற்குள் நுழைந்து...கண்ணில் பட்டவர்களை எல்லாம் காட்டுமிராண்டித்தனமாக சுட்டு தள்ளினான்.

இந்த கொடூர தாக்குதலில் சுமார் 22 பேர் சம்பவ இடத்திலே யே துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 60க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடந்த இடத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடியவன் குறித்த அதிர்ச்சிகர தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட கார்டு என்ற அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதும்... இதற்கு முன்பு அமெரிக்க ராணுவத்தின் ரிசர்வ் படையில் துப்பாக்கி பயிற்சியாளராக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இரு முறை விவாகரத்தான அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதல் தற்போது அமெரிக்க அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட கார்டு AR-15 ரக துப்பாக்கி கொண்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டதே இதற்கு முக்கிய காரணம்.

அமெரிக்காவில் நடந்துள்ள தனிமனித துப்பாக்கிச் சூடுகளில் பெரும்பாலான தாக்குதல்கள் இந்த வகை துப்பாக்கியால் நடத்தப்பட்டவையே.

ராணுவத்தில் பயன்படுத்தும் துப்பாக்கிகளுக்கு இணையான இவ்வகையான துப்பாக்கிகள் அமெரிக்காவில் வெறும் 30 ஆயிரத்துக்கு எளிதில் கிடைக்கிறது.

இதன் பயன்பாட்டை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் முன்னாள் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சியோ, அமெரிக்காவில் நடக்கும் இது போன்ற தாக்குதல்களுக்குத் துப்பாக்கி காரணமல்ல, மனநிலைதான் காரணம் என கூறுவதோடு, துப்பாக்கி வைத்துக் கொள்வது அமெரிக்கர்களின் உரிமை என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

அக்டோபர் 23ம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் சுமார் 15 ஆயிரத்து 390 பேர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதும், 19 ஆயிரத்து 536 பேர் துப்பாக்கியால் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

இதன்படி, அமெரிக்காவில் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக துப்பாக்கியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 118 ஆக இருப்பது... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அமெரிக்கர்களின் கோரிக்கையாக உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்