சாமானியன் கையில் மிலிட்டரிக்கு சமமான துப்பாக்கி.. அமெரிக்காவின் உறைய வைத்த சம்பவம்..
தனது அணு ஆயுத பலத்தால் உலக நாடுகளில் நடக்கும் சண்டைகளுக்கெல்லாம் சட்டாம்பிள்ளை வேலை பார்க்கும் அமெரிக்கா...சொந்த நாட்டு மக்கள் துப்பாக்கி சூட்டிற்கு இறையாவதை தடுக்க முடியாமல் தவிக்கிறது.
அமெரிக்காவில் அனுதினமும் துப்பாக்கிகளில் இருந்து வெளிவரும் தோட்டாக்களின் சத்தம் ஓய்ந்தபாடில்லை... எதற்காக சுடப்பட்டோம் என்பது கூட தெரியாமல் பலியாகும் அப்பாவி உயிர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.
இப்போது பென்சில்வேனியாவில்... அமெரிக்கா முன்னாள் அதிபரும், இப்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் கொல்ல முயற்சி செய்யப்பட்டதும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரூப் டாப்பிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் டொனால்டு டிரம்ப் காது கிழிந்தது.
இந்த தாக்குதல் தற்போது அமெரிக்க அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர் AR-15 ரக துப்பாக்கியை பயன்படுத்தியதே இதற்கு முக்கிய காரணம்.
அமெரிக்காவில் நடந்துள்ள தனிமனித துப்பாக்கிச் சூடுகளில் பெரும்பாலான தாக்குதல்கள் இந்த வகை துப்பாக்கியால் நடத்தப்பட்டவையே. ராணுவத்தில் பயன்படுத்தும் துப்பாக்கிகளுக்கு இணையான இவ்வகையான துப்பாக்கிகள், அமெரிக்காவில் வெறும் 41 ஆயிரத்துக்கு எளிதில் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. நிமிடத்திற்கு 800 Rounds சுட முடியும் எனக் கூறப்படுகிறது.
500 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் சுட்டு வீழ்த்தும் வல்லமை கொண்டது. அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பவர்களில் 30 சதவீத பேர் AR-15 ரக துப்பாக்கியை வைத்திருக்கிறார்கள் என 2021 ஆம் ஆண்டில் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2 கோடியே 46 லட்சம் அமெரிக்கர்களிடம் AR-15 ரக துப்பாக்கிகள் இருப்பதாகவும், சிலர் 2, 3 துப்பாக்கி வைத்திருப்பதால் அந்நாட்டும் மக்களிடம் 4 கோடியே 4 லட்சத்திற்கும் அதிகமான AR-15 ரக துப்பாக்கிகள் இருக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் 9 மாகாணங்களில் இந்த ரக துப்பாக்கிகளை வாங்க, வைத்திருக்க தடையும் இருக்கிறது.
இதன் பயன்பாட்டை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் முன்னாள் குடியரசு கட்சியோ, அமெரிக்காவில் நடக்கும் இது போன்ற தாக்குதல்களுக்குத் துப்பாக்கி காரணமல்ல, மனநிலைதான் காரணம் என கூறுவதோடு, துப்பாக்கி வைத்துக் கொள்வது அமெரிக்கர்களின் உரிமை என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. இப்போது டிரம்ப்பை குறிவைக்க AR-15 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்த பைடன் தூண்டியதாகவே குற்றம் சாட்டி வருகிறார்கள் டிரம்ப் கட்சியினர்.
மறுபுறம் அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர கடும் நடவடிக்கை அவசியம் என்ற விவாதமும் மேலோங்கியிருக்கிறது
அதிர வைக்கும் AR-15 ரக துப்பாக்கி...