மலேசியாவின் புதிய பிரதமர் - இஸ்மாயில் சப்ரி யாக்கூப் தேர்வு
அரசியல் நிலைத்தன்மை குறைந்துள்ள மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாக்கூப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மலேசிய அரசர் அல் சுல்த்தான் அப்துல்லாஅறிவித்துள்ளார். புதிய பிரதமரின் பின்ணணி பற்றி இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
60 வயதாகும் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் டெமெர்லா நகர மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மலேசியாவை மிக நீண்ட காலமாக ஆட்சி செய்து வந்த ஐக்கிய மலேசிய
தேசியக் கட்சியின் சார்பில் 2004 நாடாளுமன்றத் தேர்தலில், பெரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2008 முதல் 2018 வரை பல்வேறு கூட்டணி அமைச்சரவைகளில் அங்கம்
வகித்தார். விளையாட்டுத் துறை, விவசாயம், வர்த்தத் துறை உள்ளிட்ட பல்வேறு
துறைகளுக்கான அமைச்சராக அடுத்துதடுத்து பணியாற்றினார்.
2019இல் ஐக்கிய மலேசிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முகைதின் யாசினின் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும்
துணைப் பிரதமராகவும் கடைசி வரை பணியாற்றினார்.
பெரும்பான்மை பலத்தை நிருபிக்க 111 எம்.பிகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில் இஸ்மாயில் சப்ரி யாக்கூப்பிற்கு 114 எம்.பிகளின் ஆதரவு உள்ளது.
பெரும்பான்மையை விட 3 எம்.பி.க்கள் மட்டுமே கூடுதலாக உள்ளதால், இவரது ஆட்சிக்கும் சிக்கல் உள்ளது என்பதே சர்வதேச பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.