ஆப்கனை கைபற்றிய தலிபான்கள் : தலைவர் ஹைபத்துல்லா அக்குன்ஸடா
ஆப்கானிஸ்தானை 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கைபற்றியுள்ள தாலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
1980களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத் ரஷ்யாவின் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட முஜாஹிதீன் குழுக்களுக்கு, அமெரிக்கா ஆயுத உதவிகளை அளித்தது.
1989இல் ஆப்கானிஸ்தானை விட்டு ரஷ்ய ராணுவம் வெளியேறிய பின், முஜாஹிதின் குழுவினரிகளிடையே உள் நாட்டுப் போர் வெடித்தது.
1994இல், முஜாஹிதின் குழுக்களில் இருந்து, முல்லா முகமது ஒமர் தலைமையில் உருவான தலிபான் அமைப்பு, 1996இல் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைபற்றியது.
கந்தஹாரை சேர்ந்த மதப் பிராச்சாரகரான முல்லா ஒமர், 2001இல் அமெரிக்க படையெடுப்பிற்கு பிறகு தலைமறைவாகி, 2013இல் மறைந்தார்.
அவரின் மகனான முல்லா முகமது யாக்கூப், தலிபான் அமைப்பின்
ராணுவ பிரிவிற்கு தலைவராக உள்ளார். 35 வயதான முல்லா முகமது
யாக்கூப், தலிபான் அமைப்பின் தலைவர் பதவியை ஏற்காமல், ஹைபத்துல்லா அக்குன்ஸடாவை தலைவர் பதவிக்கு முன்மொழிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
60 வயதாகும் ஹைபத்துல்லா அக்குன்ஸடா, 2016இல் தலிபான்
அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலிபான் அமைப்பின் இஸ்லாமிய நீதிமன்றங்களின் தலைவராக செயல்பட்ட ஹைபத்துல்லா அக்குன்ஸடா, பல நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தலிபான் அமைப்பின் துணை அமைப்பான ஹக்கானி இயக்கத்தை
வழிநடத்தும் சிராஜுதின் ஹக்கானி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பின் நிதி ஆதாரங்கள் மற்றும் இதர சொத்துகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
முல்லா முகமது ஒமருடன் இணைந்து தலிபான் அமைப்பை தொடங்கிய, 53 வயதாகும் முல்லா அப்துல் கனி பரதர், தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக செயல்படுகிறார். 2010 முதல் 2018 வரை பாகிஸ்தான் ராணுவத்தினால் சிறைபடுத்தப்பட்ட
முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் அதிபராக நியமிக்கப்படுவார் என்று கருதப்படுகிறது.
2001 வரை தலிபான் அரசில் உதவியமைச்சராக பணியாற்றிய, 58 வயதாகும் ஷெர் முகமது ஸ்டானிக்ஸை, கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார். ஆப்கன் அரசு மற்றும் பல்வேறு நாடுகளுடன் தலிபான் அமைப்பினர்
நடத்திய பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து சென்றார்.