இலங்கையில் 20-ஆவது சட்ட திருத்தம் நிறைவேற்றம் - 156 எம்பிக்கள் ஆதரவு, 65 எம்பிக்கள் எதிர்ப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் 20-ஆவது சட்டத் திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2020-10-23 05:37 GMT
இலங்கை நாடாளுமன்றத்தில் 20-ஆவது சட்ட திருத்தம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிபருக்கு ஆட்சி அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டது. இதற்கு இலங்கை எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன், இந்த சட்ட திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது. 20-ஆவது சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக 156 எம்பிக்களும், எதிராக 65 எம்பிக்களும் வாக்களித்தனர். மேலும் வாக்களிப்பின்போது, சில எதிர்க்கட்சி எம்பிக்களும் சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 


"ஆபத்தான இருண்ட நாளாக பதிவு செய்து கொள்ளுங்கள்" 
 
இலங்கை நாடாளுமன்றத்தில் 20-வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளை ஒரு  ஆபத்தான இருண்ட நாளாக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று எம்.பி. சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 72 வருடங்களுக்கு மேலாக நீடிக்கும் இனப்பிரச்சினை தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சவால் இதுவரை ஒரு வார்த்தையும் பேசமுடியவிலை என்றும்  சிவஞானம் சிறிதரன் குற்றம்சாட்டினார். 

இரட்டை குடியுரிமை  பிரிவுக்கு கண்டனம் - அமெரிக்க தேசிய கொடியை உயர்த்தி எதிர்ப்பு

20-வது திருத்த சட்டத்தில் உள்ள இரட்டை குடியுரிமை  பிரிவுக்கு கண்டம் தெரிவித்து இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் அமெரிக்க தேசிய கொடியை உயர்த்தி காட்டி  தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதை கண்டித்து ஆளுங்கட்சி எம்.பி.க்கள்  கூச்சலிட்டனர். 

சிறையில் உள்ள எம்.பி. ரிஷாத் பதியுதீன் - நாடாளுமன்றத்துக்குள் வர கட்சி தலைவர்கள் எதிர்ப்பு 

இலங்கையில் அரசு சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி. ரிஷாத் பதியுதீன் பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட அவரை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 



Tags:    

மேலும் செய்திகள்