"காற்று மாசு அதிகரிப்புக்கு இந்தியா, சீனா, ரஷ்யாவே காரணம்" -அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

உலகில் காற்று மாசுபாடு அதிகமாகி வருவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2020-10-17 04:11 GMT
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரங்கள் அங்கு சூடு பிடித்துள்ளது. வடக்கு கரோலினாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், உலக அளவில் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளே முக்கிய காரணம் என்றார். மாசடைந்த காற்றை இந்த நாடுகளே வெளியேற்றுவதாக கூறிய அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அமெரிக்கா தன்னிறைவு அடைந்து விட்டதாக தெரிவித்தார்.

ஜோ பிடன் பிரசாரக் குழுவினருக்கு கொரோனா - கமலா ஹாரிசுடன் நெருங்கி இருந்ததால் அச்சம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடனின் பிரசார குழு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பிரசாரக் குழு உறுப்பினர்கள் 3 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசுடன் நெருக்கமாக இருந்து உள்ளதால், அவருக்கும் வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தாய்லாந்தில் தொடரும் மக்கள் போராட்டம் - பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம் நீடிப்பு

தாய்லாந்து பிரதமர் பிரயூத் சன் ஓச்சா பதவி விலகக் கோரியும், மன்னராட்சி முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தியும் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அற வழியில் நடந்து வந்த இந்தப் போராட்டத்தில், கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் பாங்காக்கில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். அப்போது கொண்டு வந்திருந்த குடைகளை வைத்து தங்களைக் காத்துக் கொண்ட போராட்டக்காரர்கள், தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராடச் செய்தனர்.

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் பிரமாண்ட பேரணி - இம்ரான் கான் அரசை எதிர்த்து பேரணி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை எதிர்த்து பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் பிரமாண்ட பேரணியை நடத்தின. பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஜமீயாத் உலீமா உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தப் பேரணியை நடத்தின. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, இம்ரான் கான் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனிடையே, இம்ரான் கான் அரசைக் கண்டித்து பல பொதுக்கூட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதால், இம்ரான் கான் அரசாங்கத்துக்கு அழுத்தம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

கஞ்சா நகரில் ராக்கெட் தாக்குதல் - 10 பேர் பலி, 40 பேர் படுகாயம் என அஜர்பைஜான் தகவல் 

நாஹோர்னா-காராபாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகள் தொடர்ந்து தங்களுக்குள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அஜர்பைஜானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள காஞ்சா நகரில் ராக்கெட்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் அங்கிருந்த குடியிருப்புகள் தரைமட்டமாகின. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் அஜர்பைஜான் அரசு தெரிவித்து உள்ளது.

பிரான்சில் பயங்கரம்-பள்ளி ஆசிரியை கழுத்தறுத்துக் கொலை - கொலை செய்த நபரை சுட்டுக் கொன்ற போலீசார்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே பள்ளி ஆசிரியை ஒருவர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபரை, உடனே போலீசார் சுட்டுக் கொன்ற நிலையில், செயின்ட் ஹோனோரின் பகுதியில் நடந்த இந்த சம்பவம், தீவிரவாத வெறிச்செயலாக இருக்கலாம் என்று அந்நாட்டு தீவிரவாத தடுப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனிடையே, சம்பவம் நடந்த இடத்துக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடனடியாக வந்து விசாரணை மேற்கொண்டார்.  



Tags:    

மேலும் செய்திகள்