"நீதி மற்றும் உரிமைகளை நிலை நாட்டுங்கள்" - போப் ஆண்டவர் பிரார்த்தனை
வாடிகன் நகரில் பிரார்த்தனையில் ஈடுபட்ட போப் பிரான்ஸிஸ் பெலாரஸ் நாட்டில் நீதி மற்றும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றார்.
வாடிகன் நகரில் பிரார்த்தனையில் ஈடுபட்ட போப் பிரான்ஸிஸ் பெலாரஸ் நாட்டில் நீதி மற்றும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றார். புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெலாரஸ் கலவரத்தை நினைத்து மன வேதனை அடைந்ததாக கூறிய அவர் இருவர் உயிரிழந்ததையும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மக்கள், தங்கள் நாட்டு கொடிகளை அசைத்து உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
சீனாவில் வெளியானது முதல் டிஜிட்டல் வங்கி அட்டை
சீனாவின் முதல் டிஜிட்டல் வங்கி அட்டை பெய்ஜிங்கில் வெளியானது. யூனியன் பே, பைடு மற்றும் ஐபேங்க் ஆகிய வங்கிகள் இணைந்து வெளியிட்டுள்ள டிஜிட்டல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் 7 ஆயிரத்து 193 அமெரிக்க டாலர்கள் வங்கி கடனை பெற முடியும். செல்போன் ஆப் மூலம் இதனை செயல்படுத்த முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். இந்த டிஜிட்டல் கடன் அட்டைகள் பாதுகாப்பாகவும் எளிதாகவும் கையாளக்கூடியது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அமெரிக்க அதிபர் டிரம்பின் இளைய சகோதரர் மரணம் - ஜோ பிடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் இரங்கல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 71.
நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகோதரராக மட்டுமல்லாமல், தனக்கு சிறந்த நண்பராகவும் ராபர்ட் விளங்கியதாக டிரம்ப் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். ராபர்ட் டிரம்ப், அதிபர் டிரம்புக்கு 2 ஆண்டுகள் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ராபர்ட் டிரம்ப் மறைவுக்கு, ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய பகுதியில் அமெரிக்க உளவுத்துறை விமானம்
ரஷ்யா எல்லையை கருங்கடல் வழியாக நெருங்க முயன்ற அமெரிக்க உளவு துறைக்கு சொந்தமான இபி - 3இ என்ற விமானத்தை ரஷ்யாவின் ஜெட் போர் விமானம் குறுக்கிட்டு, திருப்பி அனுப்பி உள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடும் பணிச்சுமை - டெலிவரி ஊழியர்கள் போராட்டம்
கொலம்பியாவில் கடும் பணிச்சுமையை கண்டித்து டெலிவரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரப்பி என்ற மொபைல் அப் மூலம் மருந்து, உணவு மற்றும் மல்லிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை டெலிவரி செய்து வரும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது வேலை நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை நிர்வாகமே தேர்வு செய்வதோடு, டார்கெட் முறை கொண்டு பணிச் சுமையை அதிகரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேசிய சுகாதார மையத்திற்கு நிதி திரட்ட படகு போட்டி
ஆகஸ்ட் 15 முதல் பிரான்ஸ் நாட்டிலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு நுழைபவர்கள் தங்களை தாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்தது. இந்நிலையில், தேசிய சுகாதார மையத்திற்கு நிதி திரட்டுவதற்காக இங்கிலாந்தில் நடைபெற்ற படகு போட்டியில் இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு, ஆகஸ்ட் 14ம் தேதியே பிரான்சில் கரை ஒதுங்கினர்.
குளிர்கால பனி சறுக்கும் விளையாட்டு போட்டி - ஆண், பெண் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
நியூசிலாந்தில் குளிர் கால பனி சறுக்கும் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இதில் ஆண் மற்றும் பெண் பனி சறுக்கு வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பனிபடர்ந்த மலைப்பகுதியில் நடைபெற்ற போட்டிகளில் வீரர்கள் உற்சாகமாக சறுக்கி சென்றனர். 4 நாட்கள் நடைபெறும் இந்த பனிசறுக்கு போட்டியில் முதல்நாளில் ஆண்கள் பிரிவில் டீம் வெல்ஸ் அணியை சேர்ந்த கிரய்க் முர்ரே வெற்றி பெற்றார். பெண்கள் பிரிவில் ஜெனினா குஸ்மா என்பவர் வெற்றி பெற்றார்.