அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் - காமாட்சி அலங்காரத்தில் அம்மன்-மெய்சிலிர்த்து நின்ற பக்தர்கள்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்
அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை
தினத்தன்று, நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆனி மாத அமாவாசை தினமான
வெள்ளிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உற்சவர் அங்காளபரமேஸ்வரி, காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 11 மணி அளவில் உற்சவர் அங்காளம்மனை பூசாரிகள் தோளில் சுமந்து வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்து ஊஞ்சலில் அமர வைத்தனர். பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாட, ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அங்காளம்மனை வழிபட்டனர்.