போலி மருத்துவர் அளித்த சிகிச்சையால் உயிரிழந்த பெண்ணின் உடலை, வருவாய் துறை முன்னிலையில் மருத்துவர்கள் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பிச்சனூர்பேட்டையை சேர்ந்தவர் பிரியங்கா. திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான இவர், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே பகுதியில் உள்ள பிரியா என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றிருக்கிறார். இதில், கடந்த 19 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பிரியங்கா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பிரியா மருத்துவம் படிக்கவில்லை எனவும், அவர் போலி மருத்துவர் என்றும் இணையத்தில் பரவிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனடிப்படையில், பிரியா நடத்தி வந்த கிளினிக்கில் சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில், நர்சிங் டிப்ளமோ படிப்பை பாதியிலேயே நிறுத்திய பிரியா, ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலி டாக்டர் பிரியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 7 நாள்கள் கழித்து குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை, வருவாய் துறையினர் முன்னிலையில் மருத்துவர்கள் தோண்டி எடுத்து அதிகாரிகள் பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர்.