சோளிங்கர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து 60 காலி வேகன்களுடன் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த மகேந்திரவாடி ரயில் நிலையத்தில், கடைசி வேகன் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. அப்போது எஞ்ஜின் ஓட்டுநர் மேலும் இயக்காமல் ரயிலை நிறுத்தினார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், சரக்கு ரயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காட்பாடி - சென்னை இரு மார்க்கத்திலும் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. சரக்கு ரயில் தடம் புரண்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.