திடீரென மாயமான 2 மகன்கள்.. போனில் வந்த மிரட்டல்... ஆடிப்போன ஓனர்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

Update: 2024-07-29 07:20 GMT

திருவண்ணாமலையில் நகை வியாபாரியின் மகன்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் அவர்களை மீட்ட போலீசார், கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர்...

திருவண்ணாமலை மாவட்டம், அசலியம்மன் கோயில் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் நரேந்திர குமார். இவரது மகன்களான ஜித்தேஷ் மற்றும் அரிஹந்த் ஆகிய இருவரும், இரவு நகைக்கடையை மூடிவிட்டு வரும் வழியில், அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல், 70 லட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகள் கேட்டு மிரட்டியுள்ளனர். இறுதியாக 10 லட்ச ரூபாய் தருவதாக கூறிய நிலையில், திருவண்ணாமலை புறவழிச்சாலையில் பணத்தை எடுத்து வருமாறு கடத்தல் கும்பல் கூறியுள்ளனர். அதன்பேரில், பணப்பரிமாற்றம் நடந்த போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினரை பார்த்த கடத்தல்காரர்கள், தாங்கள் கடத்திய இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர். எனினும், கடத்தல்காரர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அடகு கடை வியாபாரி ஹன்ஸ்ராஜ் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கடத்தல் நடந்ததை போலீசார் கண்டறிந்தனர். மேலும், இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்