அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, திடீரென ஆலையில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது. ஆலையின் உள்ளே சிக்கிய ஊழியர்கள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், படு காயம் அடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமானூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது