தினமும் ஓசியில் டீ குடித்த போலீசார்..காசு கேட்ட கடைக்காரருக்கு அதிர்ச்சி... முக்கிய இடத்தில் ஒரே புகார்... - "THUG LIFE"ல் அலறவிட்ட உரிமையாளர்
டீ குடித்து 7 ஆயிரம் ரூபாய் வரை கடன் வைத்த போலீசாரை, டீக்கடை உரிமையாளர் அலறவிட்ட சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...
தற்போது மீண்டும் ஓசி டீ விவகாரத்தில், போலீசாரின் அலப்பறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர் காவல் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என மொத்தம் 10 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த காவல்நிலையம் எதிரே, செல்வம் என்பவர் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். செல்வத்தின் கடையில் தான், கரியாலூர் காவல் நிலைய போலீசார் அனைவரும் டீ குடிப்பது வழக்கம்...
இவரது கடையில், ஒவ்வொரு முறையும் டீ குடித்துவிட்டு செல்லும் போலீசார், பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர்...
போலீசார் பணம் தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில், டீ கணக்கை, தனது டைரியில் டீக்கடை உரிமையாளர் செல்வம் குறித்து வைத்து வந்துள்ளார்.
7 ஆயிரம் ரூபாய் வரை கடன் பாக்கி அதிகரித்துள்ளது. ஆனாலும், கடன் தொகை திருப்பி செலுத்தாததால், செல்வம் அதிருப்தியில் இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் குடித்த டீக்கான பணத்தை செலுத்துமாறு போலீசாரிடம் கேட்டபோது, செல்வத்திற்கு அதிர்ச்சி....
போலீசார் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. போலீசாரிடம் இருந்து பணத்தை வாங்க என்ன செய்வதென்றே தெரியாமல் புலம்பி வந்துள்ளார் செல்வம்...
போலீசாரின் டீக்கடை பிரச்சினை குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் என உயர் அதிகாரிகளுக்கு புகாரை பறக்கவிட்டுள்ளார் செல்வம்...
இந்த விவகாரம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்ய உத்தரவிட்டதை அடுத்து, கடன் வைத்த போலீசார் அரண்டு போயினர். பின்னர் உடனடியாக 7 ஆயிரம் ரூபாய் கடனை, டீக்கடை உரிமையாளர் செல்வத்தின் மனைவி அன்புக்கரசியை சந்தித்து போலீசார் கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் பணத்தை கொடுத்ததை புகைப்படம் எடுத்த போலீசார், அதனை தங்களது வாட்ஸ் அப் குரூப்பிலும் பதிவிட்டனர்.