தென்காசி மாவட்டத்தில் 72 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவடியை மாவு கட்டோடு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்யாணிபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் மீது தமிழகம் மற்றும் கேரளாவில் கொலை, திருட்டு என 72-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
இவரை தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய குற்ற வழக்கிற்காக போலீசார், கடந்த மே மாதம் 17-ஆம் தேதி பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, திருச்சூரில் உள்ள சிறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறை முன்பு காவல்துறை வாகனத்தில் இருந்து தப்பிச் சென்ற பாலமுருகனை போலீசார் தேடிவந்தனர். அதைத் தொடர்ந்து கடையம் அருகே அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், பாலமுருகனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரிடமிருந்து தப்ப முயன்றதில் பாலமுருகனுக்கு கால் முறிவு ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.