சிவகாசி நாரணாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இங்குள்ள 50 அறைகளில் சுமார் 200 தொழிலாளர்கள் தினமும் பட்டாசு ரகங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், இன்று காலை தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முந்தைய தினம் பட்டாசு உற்பத்திக்கான மூலப்பொருள் கலவை செய்யப்பட்டதை முழுமையாக சுத்தம் செய்யாமல் மீதம் வைத்திருந்ததில், ரசாயன கலவை மாற்றம் ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக சிவகாசி கிழக்கு பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.