தந்தி டிவி செய்தி எதிரொலியாக, சேலத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் போதை ஊசிகள் அப்புறப்படுத்தப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டன.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆனந்தாபாலம் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், 5 தளங்களிலும் போதை ஊசி, போதை மாத்திரை, மதுபான பாட்டில் குவிந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சில இளைஞர்கள் போதையில் கிடந்த காட்சி, தந்தி டிவியில் செய்தியாக வெளியான நிலையில், போதை ஊசி பயன்பாடு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், இரவோடு இரவாக வாகன நிறுத்துமிடத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, காவலாளி பணியமர்த்தப்பட்டார். வாகன நிறுத்துமிடத்தில் மாநகர உதவி ஆணையர் ஹரி சங்கரி ஆய்வு நடத்திய நிலையில், போதை ஊசியை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நான்கு நாட்களுக்குள் வாகன நிறுத்துமிடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.