சென்னையில் டி.ஜி.பி அலுவலகம் முன்பு, மனு கொடுக்க வந்தவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் என்பவரது 14 வயது மகள், தனது தோழியுடன் கடந்த ஜனவரி மாதம், வீட்டில் இருந்த 27 சவரன் நகைகள் மற்றும் 28 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநரிடம் வேலை கேட்டதால், இருவரையும் திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளார். அந்த வீட்டில் இருந்த இருவர், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து இரு பெண்களையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நகைகள் மற்றும் பணம் குறித்து மகளிடம் முனியம்மாள் கேட்டபோது, திருவாலங்காட்டில் உள்ள வீட்டில் மறைத்து வைத்ததாக கூறிய நிலையில், நகைகள் காணாமல்போனது தெரியவந்தது. இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, டிஜிபி அலுவலகம் எதிரே, முனியம்மாள் உட்பட 3 பேர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டனர். அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி முதலுதவி அளித்து, ராணிப்பேட்டைக்கு அனுப்பி வைத்தனர்.