நீலகிரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய மோகனகிருஷ்ணனுக்கு எதிராக விசாகா குழுவில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய விசாகா குழு, மோகன கிருஷ்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தது. இதை எதிர்த்து மோகனகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுகமான சமூக பிரச்னையாகவும் உள்ளதாகத் தெரிவித்தார். இவ்வழக்கில், விசாகா குழு மீண்டும் முறையாக விசாரித்து, 60 நாட்களில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், அறிக்கையின் அடிப்படையில், மோகனகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டு, நான்கு வாரங்களில் தண்டனை குறித்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.