ஆப்சென்டான 50%மாணவர்கள்-மீண்டும் வெடித்த நீட் தேர்வு சர்ச்சை-நாட்டில் முக்கியத் தேர்வுகளில் குளறுபடி
ஆப்சென்டான 50%மாணவர்கள்... மீண்டும் வெடித்த நீட் தேர்வு சர்ச்சை - நாட்டில் முக்கியத் தேர்வுகளில் குளறுபடி
நாட்டில் முக்கியத் தேர்வுகளான நீட், நெட் போன்ற தேர்வுகளில் நீடிக்கும் முறைகேடு சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இதன் பின்னணி என்ன என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
இந்திய அரசியல் களத்தில் சர்ச்சைகளுக்கு உள்ளாகிய தேர்வுகள், அடுத்தடுத்து பரபரப்புகளை உண்டாக்கி வருகிறது..
கடந்த மே 5ம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் சர்ச்சை என நாட்டையே கொந்தளிக்க செய்தது...
இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வார்த்தை போரை தூண்டியதோடு, மாணவர்கள் மத்தியிலும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை கிளப்பியது..
இதற்கிடையில், கடந்த 18ம் தேதி நடைபெற்ற யூஜிசி நெட் தேர்வை சுமார் 9 லட்சத்துக்கும் மேலானோர் மேற்கொண்டனர்.
இந்த தேர்வு முடிந்த அடுத்த நாளே, தேர்வு தொடர்பான சில தகவல்களை பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் அனுப்பியது.
அதன் படி, நெட் தேர்வில் சில முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது தேர்வு எழுதிய லட்சக்கணக்கானோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..
இந்நிலையில், முதுநிலைக்கான நீட் தேர்வும் திடீரென ரத்தானது மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..
இப்படி அடுத்தடுத்து தேர்வுகள் ரத்து, குளறுபடி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட காரணங்களால் சர்ச்சை நிலவி வந்த நிலையில், வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தியது...
புதிய சட்டத்தின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 1 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்ற திட்டத்தை அமல்படுத்தியது...
இந்நிலையில் தான், இளநிலை நீட் தேர்வு குளறுபடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது..
கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், கருணை மதிப்பெண் வழங்கிய 1563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் படி சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மேகாலயாவில் மறு தேர்வு நடத்தப்பட்டன.
அதில் 50.4 சதவீத மாணவர்கள் மட்டுமே மறு தேர்வை மேற்கொண்டுள்ளனர். சுமார், 750 மாணவர்கள் மறு தேர்வு எழுத வராதது பேசு பொருளாகியுள்ளது..
மேலும் இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், பீகார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட் என நீண்ட மோசடி சங்கிலி தொடர் மகராஷ்ட்ரா வரை நீண்டு மகராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளைத் தடுக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், அடுத்தடுத்து பரபரப்புகளை கிளப்பி வரும் இவ்விவகாரத்தை விசாரிக்க சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
நீட் தேர்வு முறைகேட்டில் பதியப்பட்டுள்ள மற்ற வழக்குகளையும் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கைகளையும் சிபிஐ மேற்கொண்டுள்ளதாக கூறப்படுவதால், அடுத்தக்கட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர் மாணவர்கள்...