ADMK பீரியடில் அமைச்சராக இருந்தவருக்கு 2 ஆண்டு சிறை.. அப்பீல் தீர்ப்பு ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சராக டி.எம்.செல்வகணபதி இருந்தபோது, மாநிலம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கப்பட்டது. அந்த திட்டத்தில் ஊழல் நடந்ததாக, அப்போதைய அமைச்சர் செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆச்சார்யலு, எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் செல்வகணபதி உள்ளிட்ட மூவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, செல்வகணபதி உள்ளிட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்து வந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.