அரசின் நிலம் ஆக்கிரமிப்பு..? அதிகாரிகளுக்கு கெடு விதித்த நீதிமன்றம் | Madurai Highcourt | Thanthitv
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த பேச்சிமுத்து நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆக்கிரமித்த நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், காற்றாலைகளையும் அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த அவர், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் ஒரு ஏக்கர் நிலத்தை தனிநபர் எவ்வாறு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். மேலும் ஆக்கிரமிப்பு குறித்து இரண்டு வாரத்தில் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் நான்கு வாரத்திற்குள் அவற்றை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.