ஒரு உலுக்கு உலுக்கிய CBCID.. உண்மையை கக்கிய சாராய வியாபாரி - திடீரென அடிபட்ட 'ராமர்' பெயர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாதவச்சேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரின் தந்தையும், சாராயம் குடித்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களில், 5-க்கும் மேற்பட்டோர் மாதவச்சேரியைச் சேர்ந்தவர்கள். 10-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்த ராமர் என்பவரை கச்சிராயபாளையம் போலீசார் கைது செய்து, விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அப்போது, தனக்கு 10 லட்ச ரூபாய் கடன் இருப்பதாகவும், அந்த கடனை அடைக்க வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தபோது, சாராய வியாபாரி சின்னதுரை குறைந்த விலைக்கு சாராயம் கொடுப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார். சின்னதுரையிடம் இருந்து 90 லிட்டர் சாராயம் வாங்கி 70 லிட்டரை விற்பனை செய்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் இறந்துவிட்டதால், மீதமிருந்த 20 லிட்டர் சாராயத்தை அழித்து விட்டதாக ராமர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஒரு லிட்டர் சாராயத்தை தனது தந்தைக்கு கொடுத்ததாகவும், அதை குடித்து கண் பார்வை பறிபோன நிலையில் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் கூறினார். அவரிடம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தனியாக வைத்து விசாரணை செய்து வருகிறார்கள். அதில், மேலும் பல முக்கிய தகவல்கள் கூறியுள்ளதாக தெரிகிறது.