கள்ளக்குறிச்சியில், சுதந்திர தினவிழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆட்சியர் பிரசாந்த் பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, தனியார் பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்தார். அவரை செய்தியாளர்கள் வீடியோ எடுக்க முயன்றபோது, பள்ளி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படாமல், நீண்ட நேரம் வெயிலில் அமர வைக்கப்பட்டதே மாணவி மயங்கி விழ காரணம் என கூறப்படுகிறது.