அரசு பள்ளி மாணவர்களுக்கு, செல்போன் பேசிக் கொண்டே அலட்சியமாக செவிலியர் தடுப்பூசி போட்டதால், மாணவர் ஒருவர் கையில் சீழ் பிடித்து அறுவை சிகிச்சை வரை சென்றிருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே, சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கடந்த செப்டம்பர் 13ம் தேதி தடுப்பூசி செலுத்தினர். இந்நிலையில், மாணவர் ஒருவர், கடும் கை வலியால் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனின் கையை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், கையில் சீழ் பிடித்திருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக, திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில், செல்போன் பேசிக் கொண்டே அலட்சியமாக செவிலியர் தடுப்பூசி போட்டதாகர குற்றம் சுமத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.